புதுடெல்லி: நீட் தேர்வு நாடு முழுவதும் கசிந்ததா என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில், மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடைபெற்றது. இத் தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதியனர்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், சனிக்கிழமைக்குள் (நேற்று முன்தினம்) நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கை திங்கள்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி, சனிக்கிழமை தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது.
இன்று காலை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது, மனுதாரர் தரப்பில், 'நீட் வினாத்தாள் ஏப்ரல் 24ம் தேதி அனுப்பப்பட்ட நிலையில், மே 3ம் தேதி தான் வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில்தான் வினாத்தாள் இருந்தது. முக்கிய குற்றவாளி சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவரது கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை' என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கிடையில், தலைமை நீதிபதி சந்திரசூட், 'பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார். தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.
Comments
Post a Comment